புகைப்படம்

புகைப்படங்களை எப்படி விளக்குவது ? கடந்த காலத்தின் பதிவுகள் என்றா ? சில கணங்களின் உறைவிடம் என்றா ? முகங்கள் மறந்து போகாமல் இருக்க செய்யப்படும் ஏற்பாடு என்றா ? பெரும்பாலும் புகைப்படங்கள் மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே பதிவு செய்து கொள்கிறது, ஒரு வகையில் மனதை போல்.

எனக்கு புகைப்படம் அறிமுகமானது பிலிம் ரோல் போட்டு ‘டரக்’ எனும் சத்தத்தோடு படம் எடுக்கும் என் மாமாவின் நிக்கான் கேமரா மூலம் தான். நான் பார்த்த என் சிறுவயது படமென்பது ஒன்றாம் வகுப்பில் படித்த பொழுது வாடகைக்கு குடியிருந்த யாதவர் தெருவின் வீட்டில் எடுத்தது. அம்மா பூரிகட்டையில் தேய்த்துக்கொண்டிருக்கையில் அருகில் நான் கன்னங்களுக்கு கையை முட்டுகொடுத்து வேடிக்கை பார்த்துகொண்டிருப்பதை போன்றது. அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட கணம் நினைவில் இல்லை எனினும், அந்த அடுப்பங்கரையும், அம்மா அங்கே அமர்ந்து வேலை செய்ததும் ஓரளவிற்கு ஞாபகம் இருக்கவே செய்கிறது. அதன் ஊடாகவே அந்த வீடும், அது அமைந்திருந்த தெருவும், தெருவின் பெயருக்கேற்றார் போல் சரிபாதி வீடுகளில் கால்நடைகள் இருந்தததும், வைக்கோல் சாண வாடையும், வீட்டுக்கார பாட்டியும், அவர்களின் ஊமை பையனும், அந்த பாட்டியுடன் சென்று மகாமக குலத்தின் யானைக்கு பிரம்மிப்புடன் சோற்றுருண்டை கொடுத்ததும், சப்பரம் விட்டதும், தெருவிற்கு வெள்ளிக்கிழமைகளில் வந்து போகும் காளி வேஷமும், பக்கத்து வீட்டு டிவி யில் மகாபாரதம் பார்த்ததும் நினைவில் வந்து சேர்ந்து கொள்கிறது.

ஏனோ அதன் பின் சில வருடங்களாக புகைப்படம் எடுத்துக் கொண்டதாக நினைவில் இல்லை. இதற்கு அடுத்த புகைப்படம் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் நடந்த என் மாமாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்டது. புகைப்படத்தின் மீது இருந்த ஈர்ப்போ அல்லது மணமக்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமோ எது என்னை கவர்ந்தது என்று சரியாக வரையறுக்க முடியவில்லை. ஆனால் திருமண ஆல்பத்தின் பெரும்பாலான பக்கங்களில் எனக்கொரு இடத்தை பிடித்துக்கொண்டேன்.இதில்தான் ஒரு பெரிய அழகுச் சிக்கல் ஏற்பட்டு போனது. அவ்வளவாக அலங்காரங்களைப் பற்றி அக்கறை கொள்ளாத வயதாதலால் அனைத்துப் படங்களிலும் வாயை திறந்துகொண்டும், உதட்டை தொங்கப் போட்டுக்கொண்டும் இருந்து விட்டேன். வாழ்த்த வந்திருந்த சான்றோர்களும் பெரியோர்களும் கூட என்னிடம் இதை கூறவில்லை. சுயநலவாதிகள் அவர்கள் மட்டும் முடிந்த மட்டும் அழகாய் நின்றிருந்தார்கள். இப்படியாக ஆல்பம் வந்தவுடன் கேலிக்குள்ளான முதல் ஆள் அடியேன் தான்.

“ஏன்டா வாய ஆன்னு வச்சுட்டு இருக்க எல்லா போட்டோலயும், ஹி ஹி ஹி ”
“பாரேன் எல்லாப் பல்லையும் காமிச்சிட்டு இருக்கான், ஹி ஹி ஹி ”

இடையில் வஞ்சம் தீர்க்கும் படலம் வேறு.

“அப்படியே அவங்க அப்பத்தா உதடு” – இது என் அம்மாயி
“ஏன், இவங்க அப்பாக்கு மட்டும் என்னவாம்” – இது என் அம்மா

பெரிய வெட்கமாகிப் போனது. அன்று ஒரு சபதமிட்டேன். இனி எந்த புகைப்படத்திலும் வாயை கட்சிதமாக மூடி வைப்பதென்று. அதற்க்கான சந்தர்பமும் விரைவிலேயே அமைந்தது. என் அத்தை மகள் பூப்படைந்தாள். அப்படியொன்றும் முழுமையாக அதன் அர்த்தம் புரியவில்லை.இருப்பினும் நமக்கு தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள் பின் தொடர்ந்தன,

விசேஷ பத்திரிக்கை
மண்டபம்
மலர் மற்றும் பன்னீர் வாசனை
வாழ்த்த வந்த பெரியோர்கள்
தட புடல் சாப்பாடு – கடைசியாக எனக்கு தேவையான
புகைப்படக்காரர்.

எடுத்த சபதம் நன்றாகவே நினைவில் இருந்தது. முடிந்தால் நான் வாய் திறந்திருக்கும் போது எடுதுக்கொள்ளட்டுமென்று அனைத்து புகைப்படத்திலும் நின்றேன். விளைவு …. அந்த விழாவின் அனைத்து புகைப்படங்களிலும் என் ரசிகர்களுக்கு ஓர் ஆஞ்சநேயர் கிடைத்துப்போனார், வாயை இருக்கி மூடியிருந்த என் ரூபத்தில். வேறென்ன, மீண்டும்

“ஏண்டா நீ அப்படி …..”,
“ஹி ஹி ஹி க்கள் ”

இப்பொழுது இதைப் பற்றி எழுதுகிறேனே தவிர, அந்த சமயங்களில் அப்படி ஒன்றும் பெரிய வருத்தம் இருந்ததில்லை. ஒரு கோமாளித்தனமாக மட்டுமே கடந்து சென்றதாக ஞாபகம். பால்ய வயதில் எதுவும் நெடுநேரம் நீடிப்பதில்லையே.

கருப்பு வெள்ளை படங்களில் வரும் சைக்கிள் சக்கரத்தை போல் வருடங்கள் கடந்தோடின, ஆனால் புகைபடங்களின்றி. இப்போது பதின்வயது. பத்தாவது பரீட்சை எழுதியாகிவிட்டது. அதனால் இது கொண்டாடப்பட வேண்டிய தருணம் என்று தீர்மானித்தான் எங்கள் நட்பு வட்டாரத்தின் பணக்கார நண்பன் ஒருவன். தனியே சய்க்கிலில் செல்லக் கிடைத்திருந்த அனுமதி, பத்து ரூபாய் முதல் தேவைக்கேற்ப நூறு ரூபாய் வரை கிடைத்த செலவு காசு என சுதந்திரத்தின் லேசான வாடை அவன் சொன்னது சரியே என ஆமோதிக்க செய்தது. கொண்டாட்டமென முடிவாகிவிட்ட பின் அதற்க்கான ஏற்பாடுகளும் பின்தொடரும் தானே

கேக்
சிப்ஸ்
இரண்டு லிட்டர் கூல் டிரிங்க்ஸ் பாட்டில்கள்
பத்தாம் வகுப்பு முடிவதை குறிக்க கேக்கின் மேல் ’10’ என்ற என் பதித்திருந்தது
அதோடு நமக்கு தேவையான

“கேமரா”

இப்படியாக கொண்டாட்டத்தின் பல புகைப்படங்கள் வந்து சேர்ந்தன. படங்கள் அப்படி ஒன்றும் மோசமில்லை.கண்ணாடியில் முகம் பார்க்க துவங்கிய பருவமாயிற்றே. மயிரை, கண்ணை, வாயை எப்போது எப்படி வைக்க வேண்டுமென்று லேசாக பிடிபட்டிருந்தது. அதே சமயம் என் தந்தையின் பல வருட உழைப்பும் அனேகமாக திருப்பதிக் கடவுளின் கடைக்கண் பார்வையும் வீட்டின் நிறத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற துவங்கியிருந்தது. அத்தியாவசியப் பொருட்கள் கடந்து சவுகர்ய பொருட்கள் வீட்டில் மெல்ல இடம் பிடிக்க துவங்கியிருந்தது

TV
Fridge
VCD Player
Dining table
பின் ஓசியில் இல்லாமல் எங்களுக்கே எங்களுக்கான ஒரு சொந்த
“கேமரா”

அடுத்து வந்த விடுமுறை நாட்களில் சில இன்பச் சுற்றுலாக்கள், கிளிக்குகள், ஆல்பங்கள். அதே வேகத்தில் கல்லூரிக்குள்ளும் நுழைந்தாகிவிட்டது.நிறைந்த சுதந்திரம், நன்றாகவே தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணம், படிக்கட்டு பஸ் பயணங்கள், பள்ளியில் கிட்டாத இரு பாலர் வகுப்பறை.

பிறகென்ன காய்ந்த மாடு புல்லைக் கண்ட கதை தான். நினைத்த மாத்திரத்தில் சினிமா, ஓட்டல் சாப்பாடு. இதென்ன புகைப்படம் பற்றியல்லவா பெசிக்கொடிருந்தோம். சரி நேரே அங்கு சென்றிடுவோம். இன்று வரை நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களே அதிகம் என்று தோன்றுகிறது. இருப்பினும் இன்றளவும் அவர்கள் பெரும்பாலும் அருகிலேயே இருப்பதால் அதைப் பற்றி அதிகம் எழுத வேண்டாம் என்று தோன்றுகிறது. ஒரு சிறு சங்கோஜமும் கூட சேர்ந்து கொள்கிறது. அதனால் வேறு திசைக்கு இந்த உரையாடலை திருப்பி செலுத்தலாம். கல்லூரியின் மூன்றாம் ஆண்டு. Industrial visit என்ற பெயரில் ஒரு சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து ஹைதராபாத் சென்றிருந்தோம். எப்பவும் போல் அங்கும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒரு புகைப்படத்தை பார்த்து விட்டு தோழி ஒருத்தியிடம் ஏனோ அவளது ஒரு குறுப்பிட்ட புகைப்படத்தை பார்க்கையில் அவள் முகத்தில் ஒரு குழந்தையின் சேஷ்டைகள் தெரிவதாகக் கூறினேன். பெரும்பாலான பெண்களுக்குள் எப்போதும் ஒளிந்திருக்கும் ஒரு குழந்தைப் பற்றியோ, அதை பார்த்ததாகச் சொன்னால் அவர்கள் அடையும் சிறு வெட்கம் கலந்த சந்தோஷத்தை பற்றியோ அறிந்து அவளிடம் நான் அதைச் சொல்லவில்லை. எதோ தோன்றியதைச் சொன்னேன்.கடைசியில் எங்கள் முதல் நீண்ட அலைபேசி உரையாடலின் பெரும்பகுதி அந்த புகைப்படத்தைப் பற்றியதாகிப்போனது. கிளிப்பிள்ளை போல் ஏன் எனக்கு அப்படித் தோன்றியது என்று அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். நானும் எதையோ சொல்லிக்கொண்டிருந்தேன். இப்படி துவங்கிய அந்த நட்பும் பல வருடங்கள் தொடர்ந்தது. என்றும் அவள் என் மரியாதைக்குரியவளாகவும் ஆகிப் போனாள். எப்போதாவது அந்த புகைப்படத்தை பார்கையில் வரும் லேசான புன்னகையை என்றும் தவிர்க்க முடியாது.

புகைப்படங்கள் மகிழ்ச்சியான தருங்களையே புதைத்து வைத்திருந்தாலும், என்னளவில் சில நேரங்களில் சில கணமான கேள்விகளை தோற்றுவித்திருக்கின்றன. என் தாத்தா அவரது நண்பர்களோடும், சில உறவினர்களோடும் எடுத்த ஐந்தாறு புகைப்படங்கள் எங்கள் கிராமத்து வீட்டின் முகப்பறையை அலங்கரித்தன- அவர் இருந்தவரை அந்த வீடு இருந்தவரை. பின் புது வீடு கட்டப்பட்டு பொருட்கள் இடம் பெயர்ந்த பொது ஏனோ அந்த புகைப்படங்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. புது சுவற்றில் ஆணி அடிக்க வேண்டுமே, தாத்தாவின் பொருட்களோடு இருக்கட்டுமே, ஞாபக மறதி என்று காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதே போல் என் பாட்டியின் புகைப்படம் ஒன்றை கூட பார்த்ததாக ஞாபகம் இல்லை. அவள் எடுத்துக்கொள்ள ஆசைப் படவில்லையா ? இல்லை அவளிடம் யாரும் கேட்கவில்லையா ? அவள் விருப்பபட்டு யாரும் ஆமொதிக்கவில்லையா ? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை இனி தேடி பெரும் பலன் ஏதுமில்லையெனினும் அவை கேள்விகளாய் நம்மைச் சுற்றி கண்ணிற்கு புலப்படாமல் அலைவதாகவே தோன்றுகிறது.

இப்படியாக ஒவ்வொரு புகைப்படமும் அந்தந்த காலகட்ட நினைவுகளை புதைத்து கொண்டு காத்திருக்கின்றன. நிறைய கதைகளோடு பேரப் பிள்ளைகளுக்காகக் காத்திருக்கும் மூத்த தலைமுறையைப் போல். அவற்றை கண்டறிவதும் புறக்கணிப்பதும் அவர் அவரை பொறுத்து அமைந்து விடுகிறது.

To take a photograph is to participate in another person’s mortality, vulnerability, mutability. Precisely by slicing out this moment and freezing it, all photographs testify to time’s relentless melt – Susan Sontag

Posted in me, memories, photogrpah, tamil | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

நான் அறிந்த பறவைகள்

இதுவும் வழக்கமான ஒரு நாள் தான்.இரண்டாவது மாடியில் இருக்கும் எங்கள் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருக்கும் பொழுதில் கேட்ட காக்கையின் சத்தம் சட்டென்று மனதில் சில கேள்விகளையும் நினைவுகளையும் அழைத்து வந்தது. எவ்வளவோ உயிரினங்களுக்கு நடுவே உறவாடி திரிந்த மனிதனின் சந்ததி தானே நான். இந்த இருபது இருபத்தைந்து வருடங்களில் இயற்கையை விட்டு நாம் ஏன் இவ்வளவு விலகிச் சென்றுவிட்டோம் ? என்னளவில் பால்யத்தில் பார்த்து மகிழ்ந்திட்ட பறவைகள் கூட இப்போது காண்பதற்கில்லை.
Ted  இணையதளத்தில் இடம் பெற்ற ஒரு பதிவு தான்   ஒரு நிமிடம் கண்முன்னே வந்து மிரட்டிச் செல்கின்றது . அமெரிக்கா வின் ஒரு பள்ளியில் குழந்தைகளிடம் காய் கறிகளைப் பற்றி கேட்கும்பொழுது அவர்களுக்கு அதன் பெயர் கூட அறிமுகமாகியிருக்கவில்லை. http://www.ted.com/talks/lang/eng/jamie_oliver.html இவ்வாறான சூழலில் நாம் பறவைகளைப் பற்றி எப்படி தொடர்பு படுத்திக்கொள்ள போகிறோம் ? ஒரு இருபது வருடம் முன்னர் நம்மோடு புழக்கத்தில் இருந்த பறவைகள் கூட இன்று நம்மோடு இல்லை என்பதை நினைக்கையில் மிகுந்த வருத்தம் ஏற்படுகின்றது. சிறுவயதில் எங்கள் வீட்டின் கருவேப்பில்லை மரத்தில் கூடு கட்டியிருந்த அழுக்கு வண்ணாத்தி பறவை, வீட்டின் மொட்டை மாடியிலும், கிராமத்தில் தானியம் உலரவைக்கையில் வந்து போகும் சிட்டு குருவிகள், மேய்ச்சல் காட்டில் கண்ட செம்பூத்து, சூர்ய காந்தி விதையை திண்ண வந்து பாட்டியால் விரட்டபடும் பச்சைக் கிளிகள், வீட்டிலேயே வளர்ந்த கோழி கூட்டம், அதன் குஞ்சுகளை வேட்டையாடிட வட்டமிடும் பருந்துகள், இடம் பெயர்ந்து செல்கையில் தற்காலிக ஓய்வெடுத்து செல்லும் ஒரு வகை நாரைகள், இப்படி நம்மோடு பழகபட்டிருந்த சில பறவைகளும் இன்று விலகிச் சென்று விட்டதாகவே தோன்றுகிறது.

இவை வெறுமனே வேடிக்கை பார்பதற்காக என்றில்லாமல் அவற்றோடு கதையும், விளையாட்டும், ஒரு உறவாடுதலும் சேர்ந்தே இருந்து வந்துள்ளது. உதாரணத்திற்கு சிட்டுக் குருவிகள் மற்ற பறவைகளோடு ஒப்பிடும் போது பயமில்லாமல் வீட்டில் புழங்க கூடியவை. அவற்றை பிடிப்பதற்கு சிறுவர்களுக்கு விளையாட்டாகக் கற்றுக்கொடுப்பதுண்டு. வீட்டிலுள்ள முறத்தை ஒரு கவ்வை குச்சியில்(A stick which is Y shaped) சாய்மானத்தில் நிறுத்தி வைத்து அந்த குச்சியை ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவிட்டு குழந்தைகள் ஒளிந்து கொள்வார்கள். முறத்தின் கீழ் கம்போ எதோ ஒரு தானியமோ சிறிது பரப்பி வைத்திருப்பார்கள். குருவிகள் வந்து தானியம் பொருக்குகையில் கயிற்றை இழுக்கும் போது முறம் முழுவதுமாய் விழுந்து உள்ளே குருவி அகப்படும் என்பதே சூத்திரம்(logic). குருவி அகப்படுகின்றதோ  இல்லையோ குழந்தைகளுக்கு ஒரு நல்ல பொழுது போக்காய் இது இருந்ததுண்டு.
இதே போல் குறவர்கள் செம்பூத்து வேட்டையாடுவதை பற்றியும் ஒரு சுவையான கதையுண்டு. நேரில் கண்டதில்லை எனினும் வீட்டில் சொல்லி கேட்டதுண்டு. குறவர்கள் மாட்டை ஒரு குதிரை ஓட்டும் லாவகத்துடன் அதன் மேல் அமர்ந்து தலையில் ஒரு வலையை மாட்டிகொண்டு  ஒட்டிக்கொண்டு செல்வதை பற்றி கேட்கும்பொழுது கேள்வி பட்ட கதை தான் இது. செம்பூத்து வெகுதூரம் தொடர்ந்து பறக்க முடியாத பறவையாம். அதனால் குறவர்கள் காட்டில் செம்பூத்து தட்டு படும் போது அவற்றின் அருகில் செல்லும் வரை மாட்டின் பின்னல் ஒளிந்து சென்று, அதன் பின்னர் வலையை கொண்டு பிடித்து விடுவார்களம். அப்படியே கடைசி நிமிடத்தில் அவை பறக்க முற்பட்டாலும் வெகு தூரம் பரக்க இயலாததால் விரட்டிச் சென்று அவை களைப்படைந்து கீழே விழும்பொழுது பிடித்து விடுவார்களாம்.
 இப்படி அன்றாடம் இயற்கையோடு பிண்ணி பிணைந்திருந்த நாம் தான், இன்று அவற்றை அழிக்கும் திசை நோக்கி சிறுதும் வேகத்தை குறைக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். நகரத்தில் இன்று குறவர்கள் பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகளையும் பொறிக்கி பிழைப்பு நடத்திகொன்டிருக்கிறார்கள். அதனால் என்ன ? என்ற கேள்வி தான நம்மக்கு முதலில் வரும். இன்று அவர்கள் வாழ்வாதாரம் பாதிகபட்டிருக்கிறது அவை நம்மை நோக்கி வருவதற்கு வெகு காலம் ஆகப் போவதில்லை. இன்று செயற்கை கோழிகள் உற்பத்தியில் வந்து நிற்கும் நாம், ஒரு நாள் எல்லாவற்றையும் இயந்திரங்களை வைத்து தான் உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். கிராமங்களில் கோழிகள் உண்டவர்களுக்கு தெரியும் இயற்கை கொழிக்கும் இயந்திரங்களை வைத்து நாம் உற்பத்தி செய்யும் பண்ணை கோழிக்குமான  வித்தியாசம்.
 
538 பறவையினங்கள் இந்தியாவில் இருகின்றதேன்றால் அல்லது இருந்ததென்றால்  இன்றைய தலைமுறையினர் நம்புவார்களா ? பறைவகள் ஆராய்ச்சியின் பிதாமகன் Dr. சலீம் அலி அவர்கள் தான் இதனை மேற்கோள் காட்டியிருக்கிறார். The Book of Indian Birds என்ற அவரது புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் அனைத்தும் பொக்கிஷம். 538 பறைவகளையும் அவற்றின் படத்துடன், மற்றும் பிற மிக நுணுக்கமான தகவல்களுடன் அந்த புத்தகத்தில் கொடுத்துள்ளார். ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில்  “காக்கையும் சிட்டு குருவியும் தான் நம் நாடு நெடுகிலும் காணக்கிடைகின்ற பறைவகள்” என்கிறார். புத்தகம் வெளிவந்த வருடம் 1941. தண்ணீரை மாசுபடுத்தி, செல் போன் கோபுரங்கள்(tower) அமைத்து, காற்றை மாசுபடுத்தி ஐம்பது வருடத்தில் நாம் சிட்டு குருவியை  தொலைத்து விடுவோம் என்று அவர் அறிந்திருக்கவில்லை. குறைந்த பட்சம் பறைவகளோடு நேரடியாக பயனடையும் விவசாயிகளுக்காவது அதன் இன்றியமையாமை விளக்கிச் சொல்லப் பட வேண்டும். பூச்சிகளைத் தின்று, வயலில் இருக்கும் எலிகளை தின்று, இயற்கையாய் இறந்த மிருகங்களின் எச்சங்களை தின்று நோய் பரவாமல் காத்து, மகரந்த சேர்க்கைக்கு உதவி புறியும் இந்த சங்கிலி தொடரின் பலன் மிகவும் இன்றியமையாதது. அவற்றை அழித்து விடாமல் பார்த்து கொள்வது நம் கையில் தான் உள்ளது.

நகரம் கிராமம் என்ற பாகுபாடில்லாமல் இத்தனை காலம் நம்மோடு பயணித்து வந்த பறவைகளுக்கு வழி விட்டு வாழ்வோம். வீட்டின் வெளியில் நம்மால் முடிந்த தானியங்களையும், தண்ணீரையும் வைத்து அவற்றை பாதுகாப்போம். இங்கு எல்லோருக்கும் இடமுண்டு.

பின் குறிப்பு:
1. பெப்ரவரி மாதம் வேடந்தாங்கல் நானும் என் நண்பர்களும்   சென்று வந்தோம். அங்கு எடுத்த வீடியோ தொகுப்பு இதோ http://www.youtube.com/watch?v=ZN-g8zkWR8U

அந்த அனுபவத்தை இங்கே சொல்ல இயலாது. அவரவர் சென்று பார்த்து கொள்ள வேண்டியது தான்.

 2. சலீம் அலி அவர்களின் புத்தகம் online  இல் பெற விரும்பினால் <flipkart.com> இல் கிடைக்கின்றது 
3. என்னால் இயன்ற வரை தமிழ்ப் பிழை எதையும் தவிர்க்க முயற்சித்திருக்கிறேன். மீறி இருக்கும் தவறுகளை தாராளமாய் சுட்டி காட்டலாம். 
Posted in birds, nature, salim ali | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக