நான் அறிந்த பறவைகள்

இதுவும் வழக்கமான ஒரு நாள் தான்.இரண்டாவது மாடியில் இருக்கும் எங்கள் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருக்கும் பொழுதில் கேட்ட காக்கையின் சத்தம் சட்டென்று மனதில் சில கேள்விகளையும் நினைவுகளையும் அழைத்து வந்தது. எவ்வளவோ உயிரினங்களுக்கு நடுவே உறவாடி திரிந்த மனிதனின் சந்ததி தானே நான். இந்த இருபது இருபத்தைந்து வருடங்களில் இயற்கையை விட்டு நாம் ஏன் இவ்வளவு விலகிச் சென்றுவிட்டோம் ? என்னளவில் பால்யத்தில் பார்த்து மகிழ்ந்திட்ட பறவைகள் கூட இப்போது காண்பதற்கில்லை.
Ted  இணையதளத்தில் இடம் பெற்ற ஒரு பதிவு தான்   ஒரு நிமிடம் கண்முன்னே வந்து மிரட்டிச் செல்கின்றது . அமெரிக்கா வின் ஒரு பள்ளியில் குழந்தைகளிடம் காய் கறிகளைப் பற்றி கேட்கும்பொழுது அவர்களுக்கு அதன் பெயர் கூட அறிமுகமாகியிருக்கவில்லை. http://www.ted.com/talks/lang/eng/jamie_oliver.html இவ்வாறான சூழலில் நாம் பறவைகளைப் பற்றி எப்படி தொடர்பு படுத்திக்கொள்ள போகிறோம் ? ஒரு இருபது வருடம் முன்னர் நம்மோடு புழக்கத்தில் இருந்த பறவைகள் கூட இன்று நம்மோடு இல்லை என்பதை நினைக்கையில் மிகுந்த வருத்தம் ஏற்படுகின்றது. சிறுவயதில் எங்கள் வீட்டின் கருவேப்பில்லை மரத்தில் கூடு கட்டியிருந்த அழுக்கு வண்ணாத்தி பறவை, வீட்டின் மொட்டை மாடியிலும், கிராமத்தில் தானியம் உலரவைக்கையில் வந்து போகும் சிட்டு குருவிகள், மேய்ச்சல் காட்டில் கண்ட செம்பூத்து, சூர்ய காந்தி விதையை திண்ண வந்து பாட்டியால் விரட்டபடும் பச்சைக் கிளிகள், வீட்டிலேயே வளர்ந்த கோழி கூட்டம், அதன் குஞ்சுகளை வேட்டையாடிட வட்டமிடும் பருந்துகள், இடம் பெயர்ந்து செல்கையில் தற்காலிக ஓய்வெடுத்து செல்லும் ஒரு வகை நாரைகள், இப்படி நம்மோடு பழகபட்டிருந்த சில பறவைகளும் இன்று விலகிச் சென்று விட்டதாகவே தோன்றுகிறது.

இவை வெறுமனே வேடிக்கை பார்பதற்காக என்றில்லாமல் அவற்றோடு கதையும், விளையாட்டும், ஒரு உறவாடுதலும் சேர்ந்தே இருந்து வந்துள்ளது. உதாரணத்திற்கு சிட்டுக் குருவிகள் மற்ற பறவைகளோடு ஒப்பிடும் போது பயமில்லாமல் வீட்டில் புழங்க கூடியவை. அவற்றை பிடிப்பதற்கு சிறுவர்களுக்கு விளையாட்டாகக் கற்றுக்கொடுப்பதுண்டு. வீட்டிலுள்ள முறத்தை ஒரு கவ்வை குச்சியில்(A stick which is Y shaped) சாய்மானத்தில் நிறுத்தி வைத்து அந்த குச்சியை ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவிட்டு குழந்தைகள் ஒளிந்து கொள்வார்கள். முறத்தின் கீழ் கம்போ எதோ ஒரு தானியமோ சிறிது பரப்பி வைத்திருப்பார்கள். குருவிகள் வந்து தானியம் பொருக்குகையில் கயிற்றை இழுக்கும் போது முறம் முழுவதுமாய் விழுந்து உள்ளே குருவி அகப்படும் என்பதே சூத்திரம்(logic). குருவி அகப்படுகின்றதோ  இல்லையோ குழந்தைகளுக்கு ஒரு நல்ல பொழுது போக்காய் இது இருந்ததுண்டு.
இதே போல் குறவர்கள் செம்பூத்து வேட்டையாடுவதை பற்றியும் ஒரு சுவையான கதையுண்டு. நேரில் கண்டதில்லை எனினும் வீட்டில் சொல்லி கேட்டதுண்டு. குறவர்கள் மாட்டை ஒரு குதிரை ஓட்டும் லாவகத்துடன் அதன் மேல் அமர்ந்து தலையில் ஒரு வலையை மாட்டிகொண்டு  ஒட்டிக்கொண்டு செல்வதை பற்றி கேட்கும்பொழுது கேள்வி பட்ட கதை தான் இது. செம்பூத்து வெகுதூரம் தொடர்ந்து பறக்க முடியாத பறவையாம். அதனால் குறவர்கள் காட்டில் செம்பூத்து தட்டு படும் போது அவற்றின் அருகில் செல்லும் வரை மாட்டின் பின்னல் ஒளிந்து சென்று, அதன் பின்னர் வலையை கொண்டு பிடித்து விடுவார்களம். அப்படியே கடைசி நிமிடத்தில் அவை பறக்க முற்பட்டாலும் வெகு தூரம் பரக்க இயலாததால் விரட்டிச் சென்று அவை களைப்படைந்து கீழே விழும்பொழுது பிடித்து விடுவார்களாம்.
 இப்படி அன்றாடம் இயற்கையோடு பிண்ணி பிணைந்திருந்த நாம் தான், இன்று அவற்றை அழிக்கும் திசை நோக்கி சிறுதும் வேகத்தை குறைக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். நகரத்தில் இன்று குறவர்கள் பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகளையும் பொறிக்கி பிழைப்பு நடத்திகொன்டிருக்கிறார்கள். அதனால் என்ன ? என்ற கேள்வி தான நம்மக்கு முதலில் வரும். இன்று அவர்கள் வாழ்வாதாரம் பாதிகபட்டிருக்கிறது அவை நம்மை நோக்கி வருவதற்கு வெகு காலம் ஆகப் போவதில்லை. இன்று செயற்கை கோழிகள் உற்பத்தியில் வந்து நிற்கும் நாம், ஒரு நாள் எல்லாவற்றையும் இயந்திரங்களை வைத்து தான் உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். கிராமங்களில் கோழிகள் உண்டவர்களுக்கு தெரியும் இயற்கை கொழிக்கும் இயந்திரங்களை வைத்து நாம் உற்பத்தி செய்யும் பண்ணை கோழிக்குமான  வித்தியாசம்.
 
538 பறவையினங்கள் இந்தியாவில் இருகின்றதேன்றால் அல்லது இருந்ததென்றால்  இன்றைய தலைமுறையினர் நம்புவார்களா ? பறைவகள் ஆராய்ச்சியின் பிதாமகன் Dr. சலீம் அலி அவர்கள் தான் இதனை மேற்கோள் காட்டியிருக்கிறார். The Book of Indian Birds என்ற அவரது புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் அனைத்தும் பொக்கிஷம். 538 பறைவகளையும் அவற்றின் படத்துடன், மற்றும் பிற மிக நுணுக்கமான தகவல்களுடன் அந்த புத்தகத்தில் கொடுத்துள்ளார். ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில்  “காக்கையும் சிட்டு குருவியும் தான் நம் நாடு நெடுகிலும் காணக்கிடைகின்ற பறைவகள்” என்கிறார். புத்தகம் வெளிவந்த வருடம் 1941. தண்ணீரை மாசுபடுத்தி, செல் போன் கோபுரங்கள்(tower) அமைத்து, காற்றை மாசுபடுத்தி ஐம்பது வருடத்தில் நாம் சிட்டு குருவியை  தொலைத்து விடுவோம் என்று அவர் அறிந்திருக்கவில்லை. குறைந்த பட்சம் பறைவகளோடு நேரடியாக பயனடையும் விவசாயிகளுக்காவது அதன் இன்றியமையாமை விளக்கிச் சொல்லப் பட வேண்டும். பூச்சிகளைத் தின்று, வயலில் இருக்கும் எலிகளை தின்று, இயற்கையாய் இறந்த மிருகங்களின் எச்சங்களை தின்று நோய் பரவாமல் காத்து, மகரந்த சேர்க்கைக்கு உதவி புறியும் இந்த சங்கிலி தொடரின் பலன் மிகவும் இன்றியமையாதது. அவற்றை அழித்து விடாமல் பார்த்து கொள்வது நம் கையில் தான் உள்ளது.

நகரம் கிராமம் என்ற பாகுபாடில்லாமல் இத்தனை காலம் நம்மோடு பயணித்து வந்த பறவைகளுக்கு வழி விட்டு வாழ்வோம். வீட்டின் வெளியில் நம்மால் முடிந்த தானியங்களையும், தண்ணீரையும் வைத்து அவற்றை பாதுகாப்போம். இங்கு எல்லோருக்கும் இடமுண்டு.

பின் குறிப்பு:
1. பெப்ரவரி மாதம் வேடந்தாங்கல் நானும் என் நண்பர்களும்   சென்று வந்தோம். அங்கு எடுத்த வீடியோ தொகுப்பு இதோ http://www.youtube.com/watch?v=ZN-g8zkWR8U

அந்த அனுபவத்தை இங்கே சொல்ல இயலாது. அவரவர் சென்று பார்த்து கொள்ள வேண்டியது தான்.

 2. சலீம் அலி அவர்களின் புத்தகம் online  இல் பெற விரும்பினால் <flipkart.com> இல் கிடைக்கின்றது 
3. என்னால் இயன்ற வரை தமிழ்ப் பிழை எதையும் தவிர்க்க முயற்சித்திருக்கிறேன். மீறி இருக்கும் தவறுகளை தாராளமாய் சுட்டி காட்டலாம். 
This entry was posted in birds, nature, salim ali and tagged , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக